Tuesday, December 28, 2010

மறைந்து வரும் மார்கழியின் அடையாளங்கள் : வழக்கொழியும் வாசலில் கோலமிடும் முறை

மார்கழியின் அடையாளங்களான வீட்டு வாசலில் வண்ண கோலம் போடுவது வழக்கொழிந்து வருகிறது. கிராமங்களிலும் இதேநிலை தொடருவதால், பாரம்பரியமான கோலமிடும் முறை காணாமல் போகும் சூழல் உருவாகியுள்ளது.



மார்கழி என்றாலே உடல் சிலிர்க்கும் பனிப்பொழிவும், வீட்டு வாசலில் வண்ண கோலங்களும், தூரத்தில் கேட்கும் பெருமாள் கோவில் சுப்ரபாத பாடலும் பெரும்பாலும் அனைவருக்குமே நினைவுக்கு வரும். இவை அனைத்தும் கடந்த சில ஆண்டுள் வரை தொடர்ந்து கொண்டு தான் இருந்தது. இப்போது அவசர யுகத்தின் மாற்றத்தால், இவற்றில் பல மறைந்து வருகின்றன. புவி வெப்பமடைந்து, மார்கழி குளிரும் காணாமல் போகும் காலம் விரைவில் வந்துவிடுமோ என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.



கடந்த காலங்களில், மார்கழி மாதம் 30 நாட்களும் பெண்கள் காலையில் எழுந்து, வாசலில் சாணம் தெளித்து, சுத்தப்படுத்தி பலவண்ண கோலங்களை போடுவதை காண முடிந்தது. காலையில் எழுந்து கோலம் போடுவதற்காக குனிந்து எழுவது, உடற்பயிற்சிக்கு ஈடானது. நம் முன்னோர், இதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தான், காலையில் எழுந்து கோலம் போடுவதை முதல் பணியாக நடைமுறையில் வைத்திருந்தனர். அக்காலத்தில், புள்ளி வைத்து எழில் நயத்தோடு கோலம் போடுவதை காண முடிந்தது. கோலத்தின் நடுவில் பசுஞ்சாண உருண்டையில் பூசணி பூ வைப்பர். பூசணி பூவில் லட்சுமி தெய்வம் குடியிருக்கிறாள் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் உள்ளது.



வாசலில் தெளிக்கப்படும் பசுஞ்சாணம் சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது. நகரங்களில் பசுஞ்சாணம் கிடைக்காத ஒன்றாகி விட்டது. அதேபோல் பூசணி பூ கிராமங்களில் கூட காணப்படுவதில்லை. இதில் ஒரே ஒரு ஆறுதல், பொங்கல் தினத்தில், அனேகமாக எல்லா வீடுகளிலும் பெரிய கோலமிட்டு வண்ணப்பொடிகளை தூவி, அழகுபடுத்துவதை இன்றும் காண முடிகிறது.

December 27, 2010 Edition.

No comments: