Saturday, March 20, 2010

உலக சிட்டுக்குருவி தினம்


'சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு... தென்றலே உனக்கென்ன சொந்த வீடு...' என்ற பாடலுக்கு ஏற்ப, சுதந்திரமாக சுற்றித் திரியும் பறவைகளில் சிட்டுக்குருவி முதலிடம் வகிக்கிறது. தொல்காப்பியம் உட்பட இலக்கியங்களில் அதிகம் பேசப்பட்டது. பாரதியார் கவிதைகளில், சிட்டுக்குருவியின் பெருமைகளை குறிப்பிட மறக்கவில்லை.



உருவத்தில் சிறியதாக, அழகான தோற்றம் கொண்ட, சுறுசுறுப்பாக பறக்கும் சிட்டுக்குருவி, காகங்களைப் போல், மனிதர்களின் பழக்க வழக்கத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு பழகும் அறிவுபூர்வமான உன்னத பறவை. கூரை வீடுகள், ஓடுகள் வேயப்பட்ட கூரைகளில் கூடு கட்டி முட்டையிடும் பெண் குருவிக்கு, பக்க பலமாக ஆண் குருவி கூடவே இருந்து குஞ்சு பொரிக்க உதவுகிறது. வீட்டுத் தோட்டங்களில் பூச்சிகளை குருவிகள் உண்பதால், 'விவசாயிகளின் நண்பன்' என அழைக்கப்பட்டது. பல சரக்கு கடைகள் முன் சிதறிக் கிடக்கும் தானியங்களை கூட்டமாகச் சேர்ந்து உண்டு மகிழும். ஆட்கள் வந்தால், நடப்பதற்கு வழி விடுவதற்காக சற்று நகர்ந்து கொண்டு தானியங்களை உண்ணும். சூரிய உதயத்திற்கு முன்பே குரல் எழுப்பும். அதன் அழகையும், குரலின் மென்மையையும் ரம்மியமாக ரசிக்கலாம்.



அழியும் குருவிகள்: மனிதனின் பழக்க வழக்கங்களில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மாறுதல்கள், நவீன தகவல் தொழில் நுட்ப புரட்சி, இயற்கைக்கு மாறாக எடுக்கப்படும் சுற்றுச்சூழல் நடவடிக்கை போன்ற காரணங்களால், சிட்டுக்குருவி எனும் சிற்றினம் அழிவுப்பாதைக்கு தள்ளப்பட்டுள்ளது.



* வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி, வீடு முழுவதும், 'ஏசி' செய்யப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது.



* பெட்ரோலில் இருந்து வெளியேறும், 'மீத்தைல் நைட்ரேட்' எனும் ரசாயனக் கழிவு புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.



* பல சரக்கு கடைகள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றிற்கு பதிலாக, டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பிளாஸ்டிக் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், ரோட்டில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.



* வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் அழிகின்றன.



* இவையனைத்துக்கும் மகுடம் சூட்டியது போல், மொபைல் போன் வருகைக்கு பின், குருவிகள் 90 சதவீதம் அழிந்துவிட்டன. மொபைல் போன் டவர்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு, குருவியின் கருவை சிதைக்கிறது. முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாகிறது.



திண்டுக்கல் மாவட்டத்தில் மலைக்கிராமங்களில் சொற்ப அளவில் சிட்டுக்குருவிகள் தென்படுகின்றன. தேனி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பிற மாவட்டங்களில், பெயரளவிற்கு கூட இவற்றை காண முடியவில்லை. விருதுநகர் மாவட்ட வனப்பகுதிகளில் அதிகளவில் சிட்டுக்குருவிகள் இருந்தன. மரங்கள் வெட்டப்படுவதாலும், வறட்சி காரணமாகவும் குருவிகள் பசுமையான இடங்களுக்கு இடம் பெயர்வது அதிகரித்து வருகிறது.



திருச்சி இயற்கை சங்கம் பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் ரெல்டன் கூறியதாவது: ஆண் குருவி - பெண் குருவி ரோமத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. வீடுகளின் கட்டமைப்பு, நச்சுத்தன்மை வாய்ந்த உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளினால் இந்த இனம் அழிகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலை, பன்றிமலை போன்ற இடங்களில் மட்டுமே இவற்றை காண முடிகிறது. இப்பறவை இனம் அழியாமல் இருக்க, இயற் கையை பாதுகாக்க சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ரெல்டன் கூறினார்.



மதுரை பறவை வியாபாரி திலீப்குமார் கூறியதாவது: மொபைல் போன் வருகைக்கு பின், சிட்டுக்குருவிகள் இனப்பெருக்கம் செய்ய இயலாதபடி, அதன் கருப்பையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதை பறவை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். மொபைல் போன் டவர்கள் அல்லாத மலைப்பகுதிகளில், சிட்டுக்குருவிகள் குறைந்த அளவில் வசிக்கின்றன. கிராமங்களிலும் மொபைல் போன் சேவைகள் அதிகரித்து வருவதால், சிட்டுக்குருவிகள் அழிந்து வருகின்றன. இவ்வாறு திலீப்குமார் கூறினார்.



குருவிகளை காக்கும் வழி: குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிட்டுக்குருவிகளை காக்கும் பொறுப்பு ஒவ்வொருவரிடமும் உள்ளது. சிறிய வீடாக இருந்தாலும், தோட்டம் அமைக்க வேண்டும். பயிர்கள், தாவரங்கள் மீது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கக்கூடாது. குருவிகள் குடிக்க கிண்ணத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டு முன், மொட்டை மாடியில் தானியங்களை தூவ வேண்டும். மண்பானையில் வைக்கோல் வைத்தால், குருவிகள் கூடு கட்ட பயன்படும்.


நன்றி : தினமலர்.

No comments: