Saturday, November 21, 2009

காதலும் கோபமும்..

கடல் தாண்டி உலக உருண்டையின் மறு மூலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இதயம் செவி வழி வரும் ஒரு குரலின் ஒலியால் அதிவேகமாக இயங்க துடிக்கிறது. தேசம் விட்டு தேசம் வந்தாலும் கோபம் எப்படியோ கொப்பளித்து வந்து விடுகிறது. அது சொல்லில் கலந்து சொல்லாமல் சூடேற்றிவிடுகிறது. மூச்சில் வரும் சூடு மூக்கையே புண்ணாக்கி விடும் போல அவ்வளவு கோபம். காதல் வந்த இதயத்தில் காமம் வருவது இயல்பு ஆனால் கோபம் எங்கிருந்து வந்தது? இதை அக்கறை என்றோ ஆதங்கம் என்றோ சொல்லி பசப்புவது காலங்காலங்காமாக் நடந்து வரும் சப்பை கட்டு. கோபத்தையும் காதலையும் சிண்டு முடித்து போட ஏனோ எனக்கு இப்போது பிடிக்க வில்லை. கத்தவேண்டும் எனத்தோன்றியது கத்தி விட்டேன். காதலுக்கு கண் இல்லை, செவி இல்லை, மூளையும் இல்லை. இதயத்தை கொடுத்துவிட்டு இல்லாத ஒன்றை இயங்க செய்வது கருமை நிறைந்த இருளில் கண்ணை மூடிக்கொள்வது போல. கனல் போன்ற வார்தைகளை கக்கியவுடன் மனதை வெற்றிடம் சூழ்ந்து கொள்கிறது. உறவின் சுமை உள்ளத்தை ஊமையாக்கியது - இது பல இந்தியப் பெண்களுக்கு பொருந்தும். சுடுகாட்டில் வீசும் தென்றலை உணரமுடியாது. அப்போது உள்ளம் சூழ் நிலை கைதியாகி இருக்கும். ஒரு நொடிப் பொழுதில் இதனிடமா நாம் மாட்டிக் கொண்டோம் என்ற எண்ணம் மின்னல்லாய் வந்து போனால் இரு உள்ளமும் அமைதி இழக்கின்றது. உடலின் இயக்கமும் எண்ணத்தின் மயக்கமும் இணைந்து நளினப்படுவது காதல் என்னும் மகரந்த நறுமணத்தினால்.
மனதின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்றாற்போல மனிதன் வாழ்கையும் பார்க்கிறான். உருவக படுத்தக்கூடிய வேதனைகளை இறைவன் சிலருக்கு வழங்கி இருக்கிறான் – புண்ணியாவான்கள்!. உருவமில்லா வேதனைகளை சுமக்கும் மனித மனங்களை என்னவென்று சொல்ல – பாவிகள்! என்றா? சிரிப்பை உதட்டில் ஒட்டவைத்து அழும் நீரை ஆழ்மனதுள் வைத்து புதைத்து வெம்பி வெதும்பும் உயிர்கள் கணக்கில் அடங்கா.!
பல நாள் கழித்து கோபம் மறந்து போய் பேசப் போனால் குரலை கேட்டவுடன் அருகில் வந்து ஒட்டிக் கொள்கிறது கோபம். வாழ நினைத்து இறக்கத்துடிக்கும் காதல் கொண்டவர்கள்தான் நம் நாட்டில் ஏராளம். காதலுக்குள் கோபமும், கோபத்திற்குள் காதலும், தொண்டைக்குள் அடைப்பட்ட என்றும் கரையாத சர்க்கரைப் பந்து அதை விழுங்கவும் முடியாது வெளியே துப்பவும் முடியாது. அதன் சுவையாலேயே அதனால் ஏற்படும் வலியை மறந்து வாழ்கிறோம். உறவின் அனலால் உணர்வுகள் வெந்து கொண்டிருக்கிறது. உறவுகளின் இறுக்கம் சில நேரத்தில் நமக்கு தெரியாமலே வழி நடத்தும்.

No comments: