Friday, April 24, 2009

உனக்குள் இருக்கும் இன்பம்.

ரோட்டோரத்தில் ஒரு பயணி கவலையுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறார் முல்லா நஸ்ருத்தீன். “ஏன் கவலையுடன் இருக்கிறீர்?” என்று கேட்கிறார்.

“இந்த உலகத்தில் உள்ள எல்லா செல்வமும் என்னிடம் இருக்கிறது. அதனால் நான் உழைத்துச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் வாழ்க்கையில் எந்த சுவாரசியமும் இல்லை. சக மனிதர்களும் அலுப்பூட்டுகிறார்கள். எதிலும் அமைதியே இல்லை. நானே எனக்கு எதிரியாகி விட்டேன் என்று தோன்றுகிறது.”

அந்தக் கணமே அந்த மனிதனின் கையிலிருந்த பையை அபகரித்துக் கொண்டு ஓடினார் முல்லா நஸ்ருத்தீன். பயணியால் முல்லாவைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அந்த இடத்தை விட்டு அகன்ற முல்லா பயணியை அவருடைய பைக்காக நன்றாக அலைய விடுகிறார். அந்தப் பையில்தான் பயணியின் அத்தனை பணமும் பயணச் சீட்டுகளும் இருந்தன. அதெல்லாம் இல்லாவிட்டால் அந்த நாட்டில் அவரைச் சிறையில் தள்ளி விடுவார்கள். பயணி மிகுந்த பதற்றத்துடன் தேடுகிறார். கடைசியில் அவர் பார்க்கக் கூடிய இடத்தில் அந்தப் பையை வைக்கிறார் முல்லா. அந்தப் பையைப் பார்த்ததும்தான் பயணிக்கு உயிரே வருகிறது. உள்ளே இருந்த பொருட்கள் அப்படியே இருக்கின்றன. ஆகாயத்தை நோக்கிக் கையை உயர்த்தி ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறார் பயணி. அவர் முகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகிறது.

முல்லா நஸ்ருத்தீன் நினைத்துக் கொண்டார். ஒவ்வொரு மனிதனிடமும் சந்தோஷம் இருக்கிறது. ஆனால் சில மனிதர்கள் அதைத் தொலைத்து விடும்போது மட்டும்தான் தங்களிடம் அந்த சந்தோஷம் இதுவரை இருந்ததையே உணர்கிறார்கள்.

அட எத்தனை நிதர்சன உண்மை.. சந்தோஷமும் சங்கடமும் நமக்குள்ளேதான் உள்ளது அதை கண்டுபிடித்து அறிவது நம் கையில் உள்ளது என்பதை இந்த கதை அருமையாக விளக்கிவிட்டது.
இதை நான் சாருவின் வலை தளத்தில் இருந்துதான் சுட்டேன். இந்த உண்மையை சொன்னதற்காகவாவது அவர் என்னை மன்னிப்பாராக.

No comments: