Friday, November 13, 2009

இருட்டில் இயங்கும் மனம்

இரவு நேர இருளில் இயங்கும் உலகம் தெரியவில்லை, அதனால் ஏற்படும் ஒலியும் கேட்கவில்லை. ஒளியின் அவசியம் புரிந்தது. இருளை தொட்டு கண்ணுக்கு மை இட்டு கொள்ளலாம் போல ஒரு கருமை. எந்த நிறம் இதில் கலந்தாலும் அது கரைந்து போய்விடும் போல இருந்தது. கண்ணை மூடினாலும் அதே இருள்தான். உறக்கம் பிடிக்கவில்லை. புரண்டு படுத்து படுக்கையை கலைக்க மனம் வரவில்லை. நினைவலை நெஞ்சில் ஓயாது அடித்துக் கொண்டிருந்தது. அதன் ஓசை மட்டும் அடி மனதிலிருந்து சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. செவி பொத்தினாலும் அது சத்தத்தை அதிக படுத்தி பாடாய் படுத்தியது. விளக்கை எழுப்ப விரல் வரவில்லை. கவலை என்னும் உணர்வை உணர்ந்தது மனம். நிறம், மணம் இல்லாமல் இருப்பதுதானே இந்த உணர்வும் உணர்ச்சியும். நினைவு நிழல் போல தொற்றிக் கொண்டது மனதை. உள்ளத்தில் இருக்கும் எழுத்துக்களை கோர்த்தாலும் முடித்து போடாத முத்து மாலையிலிருந்து சிதறும் முத்துக்களாய் வார்த்தைகள் சிதறி போயின. மணலுக்குள் புதையும் பாதமாய் நினைவுக்குள் மூழ்கியது நெஞ்சு. காற்றில் கரையும் மேகங்களாய் என் கனவுகளும் கலைந்தன.

No comments: